In search of the emotions that colour life and imprint the beauty of experience!

Monday, January 2, 2017

வாங்க உரமாக்க கற்றுக்கொள்வோம் - 2

உரமாக்கல் முறைகளில் அடுத்து நாம் காண இருப்பது மண்புழு  உரமாக்கல். மண்புழு துணையுடன் செய்யும் இந்த உரமாக்கல் முறை 3-4 வாரங்களில் சமையலறை கழிவு குப்பைகளை உரமாக மாற்றும்.
விவசாயிகளின் நண்பன் என அழைக்கப்படும் மண்புழு, குப்பை கழிவுகளை உரமாக்ககும் வழிகளை காண்போம்.

தேவையான பொருட்கள்

1) குப்பை கழிவுகளை உரமாக்க பானை அல்லது மரத்தாலான கலன் - குறைந்த பட்சம் 2/4 அடிகள். இதன் பக்கவாட்டில் துளைகள் இட்டிருக்க வேண்டும். வெளிச்சம் வெப்பம் இதன்  மூலம் உள் புகும்.
2) பழைய செய்தித்தாள்கள். இதனை அடுக்காக கொண்டு ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள இயலும்.
3) மண் - மண் புழுவின்  செயல்பாட்டிற்கு உதவும் மண்.
4) அட்டைப்பெட்டி யின் பகுதி.
5) மண் புழு. விவசாய பொருட்கள் விற்பனை கடைகளில்  கிடைக்கும். இப்போது இணைய கடைகளிலும் கிடைக்கிறது. சுலபமாக தோட்டத்தில் கிடைக்கும் சிகப்பு மண் புழுக்களையும் எடுத்துப்  பயன்படுத்தலாம்.



பக்கவாட்டில் துளை இடப்பட்ட மரத்தாலான கலனின் அடி பகுதியில் அட்டை பெட்டியின் பகுதியை வைக்கவும். இதன்  மேல் செய்தித்தாள்களை சிறு சிறு துண்டுகளாக்கி  பரப்பவும். புழுக்களுக்கு தேவையான ஈரப்பதத்தை  இந்த அடுக்கு தக்க வைத்து கொள்ளும்.

இதன் மேல் கை பிடி அளவிற்கு தண்ணீரை தெளிக்கவும். அதிக அளவு தண்ணீர் சேர்த்தால் கழிவுகளோடு சேர்ந்து நாற்றம் விளைவிக்க கூடும். வெளிச்சத்தை விரும்பாத மண் புழுக்களுக்கு ஈரப்பதம் இன்றியமையாத ஒன்றாகும். அதற்காக கைப்பிடி அளவிற்கு தண்ணீர் தெளிக்க வேண்டும்.

இதன் மேல் மண்ணை பரப்ப வேண்டும். மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்கள் மண் புழுவிற்கு உணவாகும் கழிவுகளை உடைக்க பயன்படும்.

மண் புழுக்களை இதற்கு மேல் போட்டு  வெளிச்சம் புகாதவாறு இந்த பானை/கலனை அடைக்கவும். மண் புழுக்கள் காகிதம் மற்றும்  மண்ணாலான மெத்தையின் ஊடே சென்றுவிடும்.

ஒரு நாள் விட்டு , சேர்த்து வைத்திருக்கும் குப்பை கழிவுகளை உரக்கலனில் இடவும். மண் புழுக்களை கழிவுகளின் ஊடே கொண்டு செல்லுமாறு
மண்/காகித மெத்தையை கிளறவும்.

வாரம் ஒரு முறை ஈரப்பதத்தை சரி பார்க்கவும். அதே போல குப்பைகளை கிளறி விடவும்.

3-4 வாரம் கழித்து மண் புழுக்களுக்கு உணவாகி எச்சமாக இருக்கும் ஆற்றல் நிறைந்த உரத்தை அறுவடை செய்யலாம். மண் புழுக்களை அடி பகுதியில் விட்டுவிட்டு உரமாக மாறிய கருப்பு தங்கத்தை மட்டும் எடுக்கவும்.

மண் புழுக்கள் காகித, தோல் மிச்சங்களை விரும்பி உண்ணும்,
பால் பொருட்கள், மாமிசை மிச்சங்களை இதனுள் கழிவாக போடவேண்டாம்.
ஒரு முறையில் மக்காத கழிவுகளை மீண்டும்  விட்டு வைக்கவும். அடுத்த முறை மண் புழு நண்பன் தன் வேலையை செவ்வனே செய்திருப்பார்! :)

நுண்ணுயிர்கள் நிறைந்த சக்தி வாய்ந்த உரம் மண் புழுக்களால் இதோ உங்கள் தோட்டத்திற்கு.

குறிப்பு: பின் கட்டில் இட வசதி இருப்பவர்கள் மண் புழு உரமாக்களை பெரிய அளவிலும் செய்யலாம்.